ஐம்பெரும் விழா...! வெற்றி விழா...!

 
 கடந்த 15.03.2015 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவை வெற்றிவிழாவாக ஆக்கிய பெருமை நம் இன பெருமக்களையே சாரும். இவ்விழா சிறக்க உழைப்பையும், பொருளுதவியையும் நல்கி பக்கபலமாகத் திகழ்ந்த அனைத்து வியாபார பெருங்குடி மக்கள் மற்றும் இவ்விழாவை மிக நேர்த்தியாக தலைமையேற்று நடத்தி கொடுத்த விழாக் குழுத் தலைவர் நெமிலி திரு. கே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
 

நமது இன மக்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்!

 
என் இனிய ஜங்கம் இன மக்களே கடந்த இதழில் நான் எழுதியதைத் தொடர்ந்து இதனை எழுத விரும்புகிறேன். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நமது இனமக்கள், நாம் அறிந்தவரை 25 பிரிவுகளாக பல்வேறு பெயர்களில் சிதறிக்கிடக்கும் வகையில் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். 
 
மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நம்மின மக்கள் இணைந்தால் தவிர, நம் இனத்திற்கு உரிய, மிகப்பெரிய காரியங்களை சாதிப்பது கனவாகவே இருந்துவிடும் என கருதுகிறேன். எனவே, பிரிந்துகிடக்கும் நம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பெரும் பணியை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற உறுதியுடன் உள்ளோம்.
 
இதற்காக, ஜங்கம், தம்பிரான், ஆண்டிப் பண்டாரம், யோகீஸ்வரர் ஆகிய நான்கு பிரிவு தலைவர்களை கலந்தாலோசித்தபோது, அவர்களும் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தனர். எனவே, பசவர் மக்கள் இயக்கம் அல்லது பசவர் மக்கள் பேரவை என்ற பெயரில் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி செயல்பட வேண்டும் என விரும்புகின்றோம். இந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்தி நமது மக்கள் அனைவரும் இணைந்தால் ஒரு மிகப் பெரிய மக்கள் சக்தி இயக்கமாக உருவாக்கிட இயலும். 
 
இதன் மூலம், நம் இனமக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் அமையும். மேலும், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கல்விக் கூடங்களை நடத்துவோர் என அனைத்துத் தரப்பிலும் நம்மவர்களின் எண்ணிக்கை மிகுந்த அளவில் ஏற்பட்டுவிடும். இதன் மூலம், நம் இன மக்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்வதற்கும், உதவி பெறுவதற்கும் வாய்ப்புகள் மிகுந்து காணப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நம் இனம், துரித வளர்ச்சியடைவதுடன், அரசியல் பலமும் பெற இயலும்.  
 
அனைத்து பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து, சென்னையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திட விரும்புகின்றேன். எனவே, இனத் தலைவர்கள் இது தொடர்பான தகவல்களுக்கு என்னை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.  சென்னையில் நடைபெற்ற “ஐம்பெரும் விழாவிற்கு” அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மீண்டும் எனது நன்றியினை உரித்தாக்குகிறேன்.
 
மிக்க அன்புடன் 
சி. சண்முகம்